sourse: Chankya you tube channel
தமிழ் கல்வெட்டுகள் என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் அடையாளம் எங்கே உள்ளது? எல்லாமே நமது கோவில்களில். அத்தனை கலாச்சார பொக்கிஷங்களையும் சுமந்து நிற்கின்றன நமது ஆலயங்கள்.
உத்திரமேரூர் வைகுண்டநாதப் பெருமாள் கோவிலில் தான், புகழ்பெற்ற பராந்தக சோழன் (பொது யுகம் 10) காலத்து குடவோலை கல்வெட்டு உள்ளது. || ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபையோம் இவ்வாண்டு முதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞை || - என்று துவங்குகிறது அந்த கல்வெட்டு. அதாவது பிராமண குடியிருப்புகளான சதுர்வேதிமங்கலத்தில், சபைக்கு ஆட்களை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இப்படித்தான் வேளாண் வகை ஊரவைகளும், வணிகவகை நகரவைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். உத்திரமேரூர் குடவோலை முறை குறிப்பது பிராமணசபை தேர்தல் முறையைத்தான். சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்று சதுர்வேதிமங்கலத்தை நிர்வகிக்கும் சபையாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த வாரியங்களில் தெளிவாக யாரால் பதவிகளுக்கு வர முடியும் என்றும் வரையறுத்திருக்கிறார்கள். அதில் சில முக்கியமான அடிப்படை தர்மங்களை சொல்கிறார்கள். ஆகமங்களுக்கு முரணானவராக நடந்திருக்கக் கூடாது, பஞ்சமா பாதகங்களை செய்தவர்களோடு சேர்த்து அவர்களது பல தரப்பட்ட உறவினர் (சிட்டிசன் வசனம் போல) பெயர்கள் எழுதப்பட்ட ஓலைகளையும் குடத்தில் இடக்கூடாது. அதுபோல கொலைக் குற்றம் செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக் குற்றம் செய்பவர், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர், ஊர் மக்களுக்கு விரோதியாக இருப்போர் ஆகியோரும் உறுப்பினராக ஆகத் தகுதி அற்றவர்கள் என்கிறது. || எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார் மந்த்ர ப்ராஹ்மணம் வல்லத் ஓதுவியத்தறியவானைக் குட வோலை இடுவிதாகவும் அரைக்கா நிலமே உடைய நாயிலும் ஒரு வேதம் வல்லதாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆசாரமு டையரானாரனயேய் கொள்விதாகவும் அர்த்த ஸௌஸமும் ஆன்ம ஸௌசமும் உடையராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்திலாத்தாரை கொள்வதாகவும் எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செது கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றவைப் பேர் அவை மக்களையும் || என்கிறது மூலக் கல்வெட்டு. அதாவது, எழுபது வயதுக்கு உள்ளே, முப்பத்தைந்து வயதுக்கு மேலே இருக்கிற, மந்திரம் ஓதத்தெரிந்து, பிறருக்கும் ஓதுவிக்கிறவன் பெயரை ஓலையில் எழுதிப் போடலாம். அது போல, ஒரு வேதத்தையாவது வல்லவனாய், நான்கு உரையில் (பாஷ்யம்) ஒரு உரையை விரித்து விளக்குபவனாய் இருந்தால் அவனிடம் வரி கட்டும் நிலம் அரைக்கால் அளவிற்கு இருந்தாலே போதும்; அவன் பெயர் ஓலையை, குடத்தில் இடலாம் என்பது சிறப்பு சலுகை. அவர்களுக்குள்ளும் பிறப்பு முதல் இறப்பு வரையான உலகியல் சடங்கில் வல்லுனராக, மத ஒழுக்கத்தை கைக்கொள்பவனாக இருப்பவனையும் ஏற்கலாம். ஆகத் தூய வழியில் பொருள் சம்பாதித்து ஆன்மத் தூய்மை உள்ளவனையும் ஏற்கலாம். கடந்த மூன்றாண்டுகளில் வாரிய உறுப்பினனாய் இல்லாதவனையும் உறுப்பினராக ஏற்க, ஓலையில் பெயரெழுதிப் போடலாம். இப்படியெல்லாம் குடவோலை முறையை விளக்கும் கல்வெட்டு இருப்பது உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்து வைகுண்டநாதப் பெருமாள் கோவிலில் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். அதே போல, அந்த முறையை பயன்படுத்தியது பிராணசபை என்பதையும் மறைத்துவிடுகிறார்கள். மத ஒழுக்கம் - வேத ஞானம் - ஆகம விரோதமின்மை போன்றவைகளில் தேர்ச்சியுடையவரே சபை உறுப்பினராக முடியும் என்பதை எல்லோருமே வசதியாக கடந்துவிடுகிறார்கள்.. - சுந்தரராஜ சோழன் -
https://www.youtube.com/post/Ugkx3qt10dNYsWgMPgQnjpb-6Q4GPqfr5iev