ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த ராமபிரான்
ராமபிரான், பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு அருள்பாலித்த தலம்
வைத்தீஸ்வரன் கோவில். எனவே இங்கு ராமருக்கு தனியாக ஆலயம் ஒன்று
உள்ளது.
ராமபிரான், பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு அருள்பாலித்த தலம்
வைத்தீஸ்வரன் கோவில். எனவே இங்கு ராமருக்கு தனியாக ஆலயம் ஒன்று
உள்ளது.
ஸ்ரீ விஜய கோதண்டராமன் ஆலயம் என்பது அதன் பெயர். அழகிய இந்த
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பினுள்
நுழைந்ததும் உள்ள மகா மண்டபத்தில் பீடம் இருக்க, அடுத்துள்ள
கருவறையில் ஸ்ரீ ராமர், சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் அருள்பாலிக்
கிறார். ராமரின் பாதத்தின் அருகே பக்த ஆஞ்சநேயரின் திருமேனி உள்ளது.
இங்கு ராமபிரான் ‘விஜய கோதண்டராமர்’ என்ற திருநாமத்துடன் அருள்
புரிந்து வருகிறார். வழக்கமாக ராமரின் இடது புறம் காட்சி தரும் சீதாதேவி,
இங்கு ராமரின் வலது புறம் காட்சி தருகிறார். ராமரின் இடது கரத்தில்
கோதண்டம் காட்சி தருவதால், இவர் ‘கோதண்ட ராமர்’ என்ற திருநாமம்
கொண்டுள்ளார்.
ஆலயப் பிரகாரத்தின் தென் திசையில் 13 அடி உயரத்தில் பிரமாண்டமாக
வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருமேனி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க
வைக்கிறது. வண்ணக் கலவையில், சுதைச் சிற்பமாக உள்ள இந்த
ஆஞ்சநேயரை தரிசிக்கும் போது, அவரது கருணை பொங்கும் கண்களை
நாம் பார்த்து கொண்டே இருக்கலாம். ஆம், அந்த கண்களில் அவ்வளவு
கருணை, சாந்தம் அழகு மிளிர்கிறது. மேற்கு திருச்சுற்றில் ஆதி
ஆஞ்சநேயரின் திருமேனி உள்ளது.
சீதா தேவியை ராவணன் சிறை எடுத்து சென்றபோது, அவனை தடுத்து
நிறுத்தி வானில் அவனுடன் போரிட்டார் ஜடாயு. அப்போது ஜடாயுவின்
இறக்கையை வாள் கொண்டு வெட்டினான் ராவணன். அதில் பலத்த
காயங்களுடன் உயிருக்கு போராடிய ஜடாயு, அங்கு வந்த ராமனிடம்,
ராவணன் சீதையை சிறை எடுத்துச் சென்ற விவரத்தை கூறிவிட்டு
உயிர் நீத்தார். இதையடுத்து ராமபிரான், ஜடாயுவுக்கு இறுதிச்சடங்குகளைச்
செய்து மோட்சம் அளித்தார். ஜடாயுவுக்கு வைத்தீஸ்வரன் கோவில்
ஆலயத்தில் அருள்பாலிக்கும் வைத்தியனாத சுவாமியும் அருள்பாலித்தார்.
இன்றும் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியனாத சுவாமி ஆலயத்தின்
தென் பாகத்தில் ஜடாயு சமாதி உள்ளது. அந்த இடத்தில் ஜடாயு குண்டம்
ஒன்றில் விபூதி நிறைந்து உள்ளது. இங்கு ராமநவமி வெகுச் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேக
ஆராதனைகள் நடைபெறுகின்றன. அனுமன் ஜெயந்தி அன்று
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஏராளமான பக்தர்கள் அன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை
மாலை சூட்டி தங்கள் பிரார்த்தனைகளை நிறைவு செய்கின்றனர்.
குழந்தை வரம் வேண்டியும், கல்வியில் உயர்நிலை வேண்டியும் பக்தர்கள்
பிரார்த்தனை செய்கின்றனர். அந்த பிரார்த்தனை நிறைவேறியதும்,
ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, வடைமாலை சாத்தி, தேங்காய்
பழங்களுடன் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு அந்தப் பிரசாதத்தைக்
கொடுக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் இந்த ஆஞ்சநேயரை தரிசிக்க
பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும்,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம்
செய்வதற்காக ஆலயம் திறந்திருக்கும்.
இங்கு தம்பதி சமேதராய் அருள்பாலிக்கும் ராமபிரான், தன்னை நாடும்
பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பதுடன், அவர்களது குடும்பத்தில்
ஒற்றுமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ அருள்புரிகிறார்.
அமைவிடம்
நாகை மாவட்டம் சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் உள்ள
வைத்தீஸ்வரன் கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த
ஆலயம் இருக்கிறது.
மல்லிகா சுந்தர்
source - dina thanthi