அனுமன் பெற்ற வரங்கள்
source - dina thanthi
அனுமன்
சிறுவனாக இருந்த போது, சூரியனை சுவையான பழம் என்று தவறாக
கருதினார். அதனால் அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று முயற்சி
செய்தார்.
பதிவு: டிசம்பர் 24, 2019 18:01 PM
மண்ணில் இருந்து விண்ணை நோக்கிப் பறந்த அனுமன், சூரியனைப்
பிடித்து விழுங்க முயன்றார். அதே நேரத்தில் சூரியனைப் பிடிக்க ராகுவும்
வந்து கொண்டிருந்தது. அனுமனின் திடீர்ப் பாய்ச்சலைப் பார்த்து
பயந்துபோன ராகு, தேவர் களின் தலைவனான
இந்திரனிடம் உதவி கோரினார். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனை
தாக்கினார். இதில், அனுமன் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயமே
‘அனுமன்’ என்ற பெயருக்கு பின்னால் உள்ள காரணமாகும். ‘அனுமன்’
என்பதற்கு தாடை ஒடுங்கப்பெற்றவன்
என்று பொருள்.
தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டதை கண்டு வருந்திய வாயு பகவான்,
அனுமனை தனது மடியில் கிடத்தியவாறு தனது
இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால்,
அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டன. இதற்கு
தேவர்களும் கந்தர்வர்களும் கூட விதிவிலக்கல்ல. எனவே, அனைவரும்
பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அவர் அனைவரையும் அழைத்து
கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.
மயங்கி கிடந்த அனுமனை கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட
பிரம்மா, தனது கரத்தால் தடவிக் கொடுக்கவும், அனுமன் எழுந்தார்.
பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, “இந்த சிறுவனால் தான்,
ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள
துன்பத்தை தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய
அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும்
திருப்தி அடைவார்” என்று கூறினார்.
இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100ல் ஒரு பங்கை
அனுமனுக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள்,
சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாக
செய்வதாக ஒப்புக்கொண்டார்.
வருணன், “காற்றாலோ, நீராலோ அனுமனுக்கு மரணம் ஏற்படாது” என்றார்.
எமதர்மன், “எம தண்டத்தில் இருந்தும் நோய்களில் இருந்தும்
அனுமன் விலக்கு அளிக்கப்பட்டவன் ஆவான்” என வரமருளினார்.
அனுமன் யுத்தத்தில் சோர்வே அடையமாட்டார் என்ற வரம் குபேரனிடம்
இருந்து கிடைத்தது.
“தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற் படாது”
என்று சிவபெருமானும், “தான் இதுவரை செய்த ஆயுதங்களாலோ,
இனிமேல் செய்யும் ஆயுதங்களாலோ அனுமனுக்கு பாதிப்பு உண்டாகாது”
என்று விஸ்வகர்மாவும் வரம் கொடுத்தனர்.
இறுதியாக பிரம்மதேவர், “அனுமன் சிரஞ்சீவியாக இருப்பான்.
அந்தணர் சாபம் அனுமனை ஒன்றும் செய்யாது. விரும்பிய வடிவம்
எடுக்கவும், நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் செல்லவும்
அனுமனால் முடியும். ஒருவரிடம் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ
அனுமனுக்கு கிடையாது” என்று அருளினார். இதனால் வாயு பகவான்
மகிழ்ச்சி அடைந்து, தன்னுடைய இயக்கத்தைத் தொடங்கினார்.
No comments:
Post a Comment