திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரத்தில் அந்தத் தெருவின் வழியாகப்
போகிறவர்கள், அந்த வீட்டை வியக்காமல் போக முடியாது.
திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரத்தில் அந்தத் தெருவின் வழியாகப்
போகிறவர்கள், அந்த வீட்டை வியக்காமல் போக முடியாது.
பார்ப்பதற்கு சாதாரண விவசாயக் குடும்பம் வசிக்கும் வீடு போல் தென்பட்டாலும்,
உள்ளிருந்து வரும் ‘கமகம’ ஊதுவத்தி மணமும், கதம்பமும், சாம்பிராணி கலந்து கட்டி
வரும் வாசமும், இதையெல்லாம் விட “ஓம் நமச்சிவாய” என்று அழகிய இளங்குரலில்
வரும் மந்திரமும், அதை ஒரு சிவாச்சாரியார் வீடோ என்றே ஐயம் கொள்ள வைக்கும்.
“அருள்மொழி.. அருள்மொழி”
பதிலில்லை.. போய்ப் பார்த்தார் ஆயி அம்மாள்.
கண்மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள், அருள்மொழி.
ஆச்சரியமாக இருந்தது ஆயி அம்மாளுக்கு.. “எங்கிருந்து வந்தது இந்தப் பெண்ணிற்கு
இவ்வளவு பக்தி. இவள் வயது பெண்களெல்லாம், தோழிப் பெண்களோடு விளையாடிக்
கொண்டும், காட்டில் வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவள் மட்டும்தான்
‘சிவமே கதி’ என்றிருக்கிறாளே” என்று குழப்பத்துடனே நின்றிருந்தார்.
அரைமணிநேரம் கழித்து தீபாரதனை செய்து விட்டு சாப்பிட வந்தாள் அருள்மொழி.
சாப்பிடும் முன்பும் கூட, தியானம் செய்து விட்டு சாப்பிடும் பெண்ணைப் பார்த்து பயந்தே
போனாள், ஆயி அம்மாள்.
கணவர் கோபால் பிள்ளை வீடு வந்தவுடன், “எதாவது செய்யுங்க. சாமி கும்பிட வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? எந்நேரமும் பூஜையறையே கதின்னு கிடக்கிறா” என்று ஆதங்கப்பட்டார் ஆயி அம்மாள்.
மனைவியின் புலம்பலைக் கேட்ட கோபால், “சரி ஆயி.. உன்னோட சித்தப்பா பையனுக்கோ,
இல்லை எங்க அக்கா பையனுக்கோ வர்ற தை மாசம் பரிசம் போட்டுரலாம். இரண்டு பேருமே
நல்லவங்க. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் போயிரும்” என்றார்.
வாசலில் தொங்கிய மாவிலைத் தோரணமும், சமையலறையில் காலையிலேயே வீசிய
பலகார வாசனையுமாக, அன்று வீடே களை கட்டி இருந்தது.
“என்னம்மா விசேஷம்?” என்றாள் அருள்மொழி.
“இன்னைக்கு என்னோட சித்தப்பா வீட்டில் இருந்து உன்னை பெண் கேட்டு பரிசம் போட
வரப் போகிறார்கள். உன்னிடம் சொல்லலாம்னு பார்த்தா நீ கண்ணைத் தொறந்தாத்தானே?”
துடித்துப் போனாள் அருள்மொழி.
‘என்ன செய்வது?’ என்று தெரியாமல் திகைத்தாள் அருள்மொழி. ‘பரிசம் போட்டுவிட்டால்,
கையைக் காலைக் கட்டியாவது கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள்’ என்று
பயம்கொண்டாள்.
மனதில் இருந்த துயரம், கால்களைக் கட்டிப் போடவில்லை. விறுவிறுவென்று
வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
“சிவாயநம.. சிவாயநம” என்று ஜெபித்தபடி நடந்தவர், தன்னுணர்வு பெற்றுப் பார்த்த
போது கோமுட்டிக்குளம் என்ற நீர்த் தடாகத்தின் முன் நிற்பதைக் கண்டார்.
“அருணை ஈஸ்வரா.. உன் கருணையே.. கருணை..” என்றபடி, அந்தக் குளத்தில்
குதித்து விட்டாள், அருள்மொழி.
குளத்தைச் சுற்றி இருந்த வயல்வெளியில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள்,
அவள் விழுந்ததைப் பார்த்து ஓடிவந்தனர். குளத்தில் குதித்துத் தேடிப் பார்த்தனர்.
எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.
ஆயி அம்மைக்கும், கோபாலனுக்கும் அழுதழுது கண்ணீர் வற்றி விட்டது. எல்லோரும்
எவ்வளவோ சொல்லியும் குளக் கரையை விட்டு நகர மாட்டேன் என்று அங்கேயே தவம்
இருந்தார்கள். குளத்தில் எதாவது சின்னச் சலனமாவது தெரி கிறதா? என்று பார்த்துக்
கொண்டே இருந்தார்கள். ஆனால் குளம் மவுனமாகவே இருந்தது.
மூன்றாவது நாள் குளம் திடீரென சல சலத்தது. தாயும், தந்தையும் உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு பார்த்தார்கள். அங்கே அன்று மலர்ந்த மலர்போல் உயிருடன் வந்தாள்,
அருள்மொழி.
விஷயம் கேள்விப்பட்டு கூடிய கூட்டத்தினருக்கு, அருள்மொழி அங்கிருந்த குளக்கரை
மண்ணை எடுத்து கொடுக்க, அது அருணாசலேஸ்வரர் அவல், பொரி பிரசாதமாக மாறியது.
தனக்கு சிவபெருமானே குருவாக இருந்து யோக நிலையைக் கற்றுத் தந்ததாகவும், தான்
ஒரு பெண் சித்தராக மாறி விட்டதாகவும் கூறிய அருள்மொழி, தன் பெயர் ‘அம்மணி அம்மாள்’
என்றும் சொன்னார்.
அப்போதே திருவண்ணாமலைக்கு பயணப்பட்டார். கண் நிறைய அண்ணாமலையானை
தரிசித்து “பக்தர் களுக்கு தொண்டு செய்வதே மகேசனைத் திருப்திப்படுத்தும்” என்று
அன்றிலிருந்து அருணைக்கு வரும் பக்தர்களுக்கும், கிரிவலம் செய்பவர்களுக்கும்
தொண்டாற்றத் தொடங்கினார். ஆனால் ஈசன் எதற்காக அவரைத் தேர்ந்தெடுத்தானோ,
அந்தப் பணி முடிவடையாமலேயே இருந்தது.
திருவண்ணாமலைக் கோவிலில் அனைத்து கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில்,
வடக்கு கோபுரம் மட்டும் எப்போது கட்ட ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு தடங்கல் வந்து கட்டி
முடிக்க முடியாமல் மொட்டை கோபுரமாகவே நின்றது.
ஒருநாள் இரவு அம்மணி அம்மாள் கனவில் வந்த ஈசன், “வடக்கு கோபுரத்தைக் கட்டுவதே
உன் பணி” என்று சொல்லி மறைந்தார்.
அன்றில் இருந்து உயிர் மூச்சாக அந்தப் பணியைத் தொடங்கினார்.
அவர் ஆற்றலை அறிந்த வணிகர்கள், பண உதவி செய்தனர். ஒரே ஒருவர் மட்டும்
பணத்தை வைத்துக் கொண்டே இல்லை என்று கூறிவிட்டார்.
அப்போது அம்மணி அம்மாள், அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தின் அளவை
சரியாகச் சொல்ல, வீட்டுக்குச் சென்றதும் எண்ணிப்பார்த்த வணிகருக்கு பெரிய அதிர்ச்சி.
அம்மணி அம்மாள் கூறிய தொகை, ஒரு ரூபாய் கூட அதிகமாகவோ குறைவாகவோ
இல்லாமல், மிகச்சரியாக இருந்தது. அந்தச் செல்வந்தர், உடனடியாக மனம் மாறி,
இருமடங்கு பொருளுதவி செய்தார்.
இவ்வாறு பலரும் பொருளுதவி செய்ய, கோபுரம் ஒவ்வொரு நிலையாகக் கட்டி
முடிக்கப்பட்டு, ஐந்து நிலைகள் வரை வந்துவிட்டது.
எல்லாப் பணமும் தீர்ந்து விட்டாலும், இனி யாரைக் கேட்பது என்று சோர்வடையாமல்,
மைசூர் மகாராஜாவிடம் சென்றார், அம்மணி அம்மாள்.
இவரின் எளிய தோற்றம் கண்டு, தடுத்து நிறுத்திய காவலன் “யார் நீ?” என்றான்.
“மகாராஜாவிடம் உதவி கேட்டு வந்திருக்கிறேன் அப்பா”
“பார்க்கலாம்.. அப்படிப் போய் உட்காரு..”
சொன்னபடியே ஓரமாகப் போய் உட்கார்ந்து விட்டார் அம்மணி அம்மாள்.
ஆனால் தனது லகிமா சக்தியால், அரண்மனைக்குள் தர்பார் மண்டபத்திற்குள் நுழைந்து,
மகாராஜா முன்னால் போய் நின்றார்.
உரிய அனுமதி இல்லாமல் தன் முன் வந்து நின்ற பெண்ணைப் பார்த்த அரசர் ஆச்சரியம்
அடைந்து, “யார் நீங்கள்?” என்றார்.
“என் பெயர் அம்மணி. திருவண்ணாமலை வடக்கு கோபுரம் கட்ட பொருளுதவி கேட்டு வந்தேன்.
காவல்காரன் உள்ளே விட மறுத்ததால், லகிமா சக்தியைப் பயன்படுத்தி உள்ளே வந்தேன்.”
“என்ன இது.. என்னால் நம்ப முடியவில்லையே?. யாரங்கே காவல்காரனை அழைத்து வா”
மன்னனின் கட்டளைப்படி அரண்மனைக் காவலன் உள்ளே வரவழைக்கப்பட்டாள். அவன்
தான் வெளியே நிறுத்தி வைத்த பெண்மணி, உள்ளே இருப்பதைக் கண்டு ஆச்சரியம்
கொண்டான். “நீ எப்போது உள்ளே வந்தாய்.. வெளியே அல்லவா அமர்ந்திருந்தாய்?”
மகாராஜா குழம்பிப் போய் அம்மணி அம்மாளையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியே
போய்ப் பார்க்க, அங்கே அம்மணி அம்மாள் அமர்ந்து இருந்தார்.
அவரது சக்தியைக் கண்டு வியந்து, அவருக்கு உரிய மரியாதைகள் செய்து பட்டுப்புடவை
பரிசளித்து குதிரைகளில் பொன்னும் பொருளும் அனுப்பி வைத்தார்.
அதைக்கொண்டு ஆறு மற்றும் ஏழாம் நிலைகளைக் கட்டி முடித்தார். மீண்டும் பொருள்
தீர்ந்து விடவே, “நீயே கதி.. நீயே சரணம் நமசிவாய” என்று தவத்தில் ஆழ்ந்து விட்டார்.
தவத்தில் காட்சி அளித்த இறைவன், “பொருள் தேவைப்படும் இடங்களில் எல்லாம்,
வேண்டிய அளவு திருநீற்றைக் கொடு. அது பொன்னாக, கூலிப்பணமாக மாறி விடும்” என்றார்.
அம்மணி அம்மாளும் அதன்படியே செய்ய பதினொரு நிலைகள் கட்டி முடிக்கப்பட்டன.
இவரது இறை ஆற்றலையும், விடாமுயற்சியும் கண்டு அப்போதைய ஆங்கிலேய அரசு
வாய் பிளந்தது.
மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்களை விட உயரமாகவும், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்திற்கு
இணையாகவும் இருந்த கோபுரம் பதிமூன்று கலசங்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது.
கோபுரத்தைக் கட்டி முடித்து, ஈசன் அருளால் தானே முன்னின்று கோபுர கும்பாபிஷேகத்தையும்
செய்து வைத்தார், அம்மணி அம்மாள்.
அவர் கட்டியமைத்த கோபுரம், இன்றளவும் ‘அம்மணி அம்மாள் கோபுரம்’ என்றே
அழைக்கப்படுகிறது.
தன் யோக சக்தியால் திருநீற்றின் மூலம், பல்லாயிரக்கணக்கானவர்களின் நோய் தீர்த்த
அம்மணி அம்மாள், தனது ஐம்பதாவது வயதில் தைப்பூச தினத்தன்று ஈசனோடு கலந்தார்.
இவரது ஜீவ சமாதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், எட்டாவது லிங்கமான
ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
1735-ம் ஆண்டு மார்கழித் திங்கள் ஆயி அம்மாள் - கோபால் பிள்ளை தம்பதிக்கு மார்கழி
மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் அம்மணி அம்மாள். அவர் சிவனையே
குருவாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் இறை தொண்டு செய்து, 1875-ம் ஆண்டு
சிவலோகப் பதவி அடைந்தார்.
அவர் ஈசனோடு கலந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்றும் இவரின்
சமாதியில் கொடுக்கப்படும் விபூதிப் பிரசாதம் நோய்களை தீர்க்கிறது.
இன்றும் கிரிவலம் வரும் பக்தர்கள் அம்மணி அம்மாளை தியானம் செய்து நம்பிக்கையோடு
தனது குறைகளைச் சொல்லிச் செல்கின்றனர். அவர்களின் வேண்டுதலை அம்மணி
அம்மாள் அரூபமாக நின்று கேட்டு வழிநடத்துவதாகவும் நம்பப்படுகிறது. அவரது
சன்னிதியில் தியானம் செய்தாலே, மனம் அமைதி பெறுவதை உணர முடியும்.
பெண்களுக்கு ஆன்மிக சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
ஒரு பெண் தன்னந்தனியாக ஒரு கோபுரத்தையே கட்டி முடித்திருக்கிறார் என்பது
சாதாரணக் காரியமல்ல..
இறையருளும், விடாமுயற்சியும், வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்ட அம்மணி
அம்மாளின் நினைவாக இன்றும் போற்றப்படும் திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தையும்,
அவரின் ஜீவசமாதியையும் எப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
கோவிலுக்குச் சென்றாலும் தரிசித்து விட்டு வருவோம்.
source- dina thanti
No comments:
Post a Comment